எப்போது முதல் துப்பாக்கிக் குண்டு உங்கள் தலையைத் துளைக்கிறதோ அப்போது அரசியல் மற்றும் எல்லாக் குப்பைகளும் சன்னலுக்கு வெளியே போய்விடுகின்றன.

-ஹூட்(எரிக் பானா) – ப்ளாக் ஹாக் டவுன் படத்தில்

படத்தின் முதல் சீனிலேயே ஒரு துப்பாக்கி வெடிப்பதும் ஒருவன் குண்டடிபட்டு வீழ்வதும் படம் பார்க்கிறவர்களது கவனத்தை மொத்தமாகக் கவரும்தானே அதுவும் குண்டடிபட்டுச் சாய்ந்தது தங்கள் அபிமானத்துக்குரிய நாயகன் சிவாஜி கணேசன் என்றால் எதிர்பார்ப்பு எகிறுமா எகிறாதா? படம் இப்படி ஆரம்பிக்கிறதென்றால் முழுப்படமும் இனி என்னவாக நிகழும் சிவாஜி எதுவும் கௌரவத் தோற்றமா அல்லது இது கனவு என அடுத்த ஸீனில் எழுந்து அமர்ந்து எல்லோரையும் ஏமாற்றப் போகிறாரா? பொதுவாக நாயகன் இறக்கிறாற்போலப் படத்தின் கடைசியில் காட்டுவதற்கே அத்தனை துணிச்சல் இல்லாத அந்தக் காலத்தில் இப்படி ஒரு படத்தை முதல் ஸீன் என்று ஆரம்பிக்க எவ்வளவு பெரிய தைரியம் வேண்டும்?

அந்த நாள் படம் அப்படித்தான் ஆரம்பித்தது. தன் வீட்டில் உலவுகிற சின்னையா அடுத்த வீட்டில் படாரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டு போலீசை அழைக்க ஓடுகிறார். எதிரில் வரும் ஆபீசரைப் பதற்றத்தோடு விஷயம் சொல்லி அடுத்த வீடு நோக்கி அழைத்து வருகிறார். உள்ளே வீழ்ந்து கிடப்பவனின் பெயர் ராஜன். அவனொரு ரேடியோ இஞ்சினியர். அவனைக் கொன்றது யார் என்று துப்புத்துலக்க இன்ஸ்பெக்டரோடு சி.ஐ.டி. சிவானந்தமும் உறுதுணையாக இருக்கிறார்.

ராஜனுக்கும் அவன் தம்பி பட்டாபிக்கும் சொத்துச்சண்டை உள்ளது. அதனால் அந்தக் கொலையைப் பட்டாபிதான் செய்திருப்பான் என்று அவன் மனைவி ஹேமா கூறுகிறாள். அவள் மீது ஆத்திரமடையும் பட்டாபி தன்னைவிட ஹேமாவுக்குத்தான் ராஜன் மீது ஆத்திரம் அதிகம் என்று திருப்புகிறான். முதலில் எதுவும் பேசாதவள் பிறகு அம்புஜம் எனும் நடனப்பெண்ணுடன் ராஜனுக்கு சினேகிதம் உண்டென்றும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் அவள்தான் ராஜனைக் கொன்றிருப்பாள் என்று தன் கருத்தைப் பகிர்கிறாள். அம்புஜத்தைக் கண்டுபிடித்து அவளைக் கிடுக்கிப்பிடிபோட்டுக் கேட்கின்ற போலீஸாரிடம் அவள்தான் ராஜனைக் கொல்லவில்லை என்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னையாதான் ராஜனைக் கொன்றிருக்க வேண்டுமெனவும் அதற்கான முகாந்திரத்தின் வழி விளக்குகிறாள்.

இப்படியாக ஒவ்வொருவரும் தாங்கள் இல்லை என்பதைச் சொல்வதோடு இன்னார்தான் கொன்றிருக்க வேண்டுமென்ற சந்தேக வலையை அடுத்தவர்மீது படர்த்திக்கொண்டே செல்ல ஒரு வட்டமடித்து ஆரம்பித்த இடத்துக்கு வந்து நிற்கிறது வழக்கு.

இன்னும் விசாரிக்க வேண்டியிருப்பது ஒரே ஒரு நபர்தான். அது தான் உஷா செத்துப்போன ராஜனின் மனைவி. அவளோ கணவனை இழந்த துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாள். ஒரு முடிவுக்கு வரமுடியாத சி.ஐ.டி. சிவானந்தம் யதேச்சையாகத் தனக்குக் கிடைக்கும் துண்டுச்சீட்டை திரும்பத் திரும்பப் படித்து ஒரு முடிவுக்கு வருகிறார். ராஜனின் வீட்டுக்கு வழக்கில் விசாரிக்கப்பட்ட அனைவரையும் அழைத்து அணிவகுக்கச் செய்கிறார். ஒவ்வொருவர் கையிலும் ஒரு துப்பாக்கி அது வெடிக்குமே தவிர அதில் தோட்டா இராது. அப்படியான டம்மி துப்பாக்கியைத் தந்து சின்னையா, அம்புஜம், ஹேமா, பட்டாபி இவர்களோடு உஷா கையிலும் துப்பாக்கி தருகிறார். தன்னை ராஜன் என்று பாவனை செய்து சுடச் சொல்கிறார்.

உஷாவால் சரியாக சுடமுடியாமல் போகவே அழுதுகொண்டு உள்ளே சென்றுவிடுகிறாள். மற்றவர்களால் சரிவரத் துப்பாக்கியைக் கையாளத் தெரியவில்லை. ஆனாலும் பட்டாபியையும் ஹேமாவையும் கைது செய்யச் சொல்கிறார் சிவானந்தம். உள்ளே இருந்து திரும்பி வரும் உஷா தன் கணவனைத் தானே சுட்டுக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்கிறாள்.

கணவன், ஜப்பான் நாட்டுக்கு விலை போய் அவர்கள் நம் நாட்டைக் குண்டுகளெறிந்து துவம்சம் செய்ய உதவுகிற கெடுமதியன் என்பதை உணர்ந்து நாட்டைக் காக்கவே தன் கணவனென்றும் பாராமல் அவனை உஷா கொன்றழிக்கிறாள் என்பது தெரியவரும்போது அழகான த்ரில்லர் படமாக அந்த நாள் எல்லோருக்கும் உவப்பான ஒன்றாக மலர்ந்தது.

தமிழ்த் திரையுலகம் பாடல்களின் பிடியில் சிக்குண்டிருந்தபோது பாடல்கள் ஏதும் இல்லாமல் வெளியான முதல் படம் அந்த நாள். எஸ்.பாலச்சந்தர் ஜப்பானிய இயக்குனர் அகிராகுரோசோவா இயக்கிய ரஷோமானின் பாதிப்பில் அந்த நாளை உருவாக்கினார். தமிழின் மடைமாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக எண்ணற்ற விஷயங்களுக்கான முன்னோடியாக அந்தநாள் திகழ்ந்தது. பராசக்தி படத்தில் தன் சிறந்த நடிப்பாற்றலை நிரூபித்தபடி அறிமுகமான சிவாஜி கணேசன் திரைவாழ்வில் அவர் நடித்தளித்த ஆகச்சிறந்த படங்களில் ஒன்று அந்த நாள்.

படத்தில் அவர்தான் நாயகன் அவரே வில்லன். தன் கெடுமதியை பார்ப்பவர் மனங்களில் சிந்தாமல் சிதறாமல் இடம்மாற்றிவிடும் வகையில் தன் அபாரமான நடிப்பாற்றலால் மிளிர்ந்தார் சிவாஜி. மேலும் அவர் இந்தப் படத்தில் குரலைப் பெரிதும் உயர்த்தாமல் பேசி நடித்ததும் முகமொழியால் பல முக்கியக் காட்சிகளை நகர்த்தியப் பாங்கும் பெரிதும் போற்றத்தக்கது. சிவாஜிகணேசனுக்கு தேசிய விருதை வழங்கியிருக்க வேண்டும் என்று மெச்சத்தக்க பல படங்களைத் தன் நடிப்பு வாழ்வில் தந்தவர்தான் அவர் என்றாலும் பராசக்திக்கு அடுத்து அப்படிப் புகழத்தக்க அடுத்த படமாக அந்த நாள் படத்தைச் சொல்லலாம்.

இசை, ஒளிப்பதிவு, எடிடிங்க் என எல்லாமே கச்சிதமாகத் துணை நின்றன. பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், டி.கே. பாலச்சந்திரன், பிடிசம்மந்தம், சட்டாம்பிள்ளை, வெங்கட்ராமன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஏவி.எம்மின் அந்த நாள் எந்த நாளும்.

முந்தைய தொடர்: http://bit.ly/2m5JR0C